கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே
பதிமூன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
குழலிசைக்கும் யாழிசைக்கும் இனிமை அள்ளிக் கொடுக்கும்
மழலைச் சொல் மொழியாள் முருக்க மலரனைய வாயாள்
அழகு பொருந்திய குவளையிடப்பட்ட சாடியினுள் தன் கண்
நிழலைப் பார்த்து மயங்கி வண்டெனவே விரட்டுகின்றாள்...
யாழ்க்கும் இன் குழற்கும் தான் இன்பம் வழங்கும் மொழியாள்
கீழ்வாய் முருக்க மலர்வெல்லும் மழலைச் சொல்லாள் ஒருத்தி
தாள் குவளையிட்ட குளிர்மதுச் சாடியினுள் நிழல் கண்டவளும்
வாள் கண்ணினை மலர்மதுவுண் வண்டென்று ஓட்டுகின்றாள்...
வாய்த்த சொல்லின்பம் குழலையும் யாழையும் பழிக்கவும்
சேய்த்தன் சொல்லினிமை மொழியாளும் செவ்விதழாள்
தோய்ந்த கருங்குவளை இடப்பட்ட சாடியினுள் வாள்கண்
பாய்ந்த நிழலைத் தான் வண்டென நினைந்து ஓட்டினாள்...
கண்டாலும் கேட்டாலும் இனிக்கும் அழகு மொழியாள் ஒருத்தி
வேண்டாதார் விரும்பும் மழலை மென் சொல்லாள் குவளைத்
தண்டாள் மலரிட்ட மதுச் சாடியுள் வாள் கண்ணின் நிழலைக்
கண்டாள் அதனை வண்டிரண்டு வந்ததென்றவள் விரட்டினாள்...
கேட்கும் யாழும் குழலும் தடுக்கும் அவள் சொல் கொடுக்கும்
வேட்கை பொருந்திய மழலையின் மெல்லிய மொழியினாள்
ஆட்சி செய்யும் கட்சாடியுள் குவளையை வாள்கண் நிழலின்
காட்சி எனக்கண்டவளும் விரட்டினாள் மதுவுண் வண்டென்றே!
பாடல்:
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள் தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்...
விளக்கம்:
யாழின் இசைக்கும் இனிய குழலிசைக்கும் இன்பம் கொடுத்தவை
இவள் சொற்கள் தானாம். கேட்பதற்கு மெல்லிய மழலை மொழியினையும்
முருக்க மலரனைய சிவந்த வாயினையுடைய ஒருத்தி கருங்குவளை
மலர்களைத் தண்டோடு இட்டபட்டிருக்கும் குளிர்ந்த மதுவுள்ள சாடியினுள்
தன் வாள் போன்ற கண்ணின் நிழலைப் பார்த்து அதனை நிழல் என்று
அறியாது குவளை மலர்களில் மதுவுண்ண வந்த வண்டுகள் என்றே
ஓட்டுகின்றாள்.
கள்ளிருக்கும் சாடியினுள் குவளை, தாமரை போன்ற மலர்களை
மணத்திற்காக இட்டு வைத்தல் மரபு.