Sunday, November 24, 2013

ஊன் மயங்கும் மதுவருந்த உறிஞ்சிக் குழலை நாடினாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பத்தொன்பதாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




வண்டுகள் மொய்க்கும் வானளாவிய கூட்டமது யாசகரும்

வேண்டுவன எல்லாமும் பெற்றிடப் பெருஞ் செல்வந்தரைக்

கண்டுகொள்ளும் பிரிவு ஆற்றாமல் வாட்டம் கண்ட ஒருத்தி

ஈண்டு கள் உறிஞ்சக் குழலை நாடினாள் வாய்ப் புகுமென்று....



வானளாவிய பெருஞ்செல்வத்தை நாடும் யாசகர் கூட்டமும்

தேனுலாவிய பூக்களில் மொய்த்திடும் வண்டுகளின் கூட்டமது

பானகம் அருந்தத் தன் செவ்வாய்த் திறந்தால் உட்புகுமென்று

தானவளும் செங்கழுநீர்க் குழலெடுத்து உறிஞ்சத் தொடங்கினாள்...



வான் விரிகின்ற பெருஞ்செல்வம் தேடும் யாசகர் போலும்

தான் பிரிகின்ற துயரம் ஆற்றாமல் கூடும் கூட்டம் போலும்

தேன் சொரிகின்ற பூவில் வண்டுகள் கண்ட ஒருத்தி மேலும்

ஊன் மயங்கும் மதுவருந்த உறிஞ்சிக் குழலை நாடினாள்...



சூசகமாய் தன் வறுமை நீங்கச் செல்வந்தரை நாடிப் பொருள்

யாசகமாய் பெறுவோரின் பிரிவு ஆற்றாமல் கூட்டம் போலும்

வாசனைப் பூக்களில் தேன் மொய்க்கும் வண்டுகள் கண்டவளும்

யோசனை கொண்டு உறிஞ்சிக் குழலெடுத்து மதுவருந்தினாள்...



போயும் பெருஞ் செல்வந்தரிடம் பெறுகின்ற யாசகர்கள் போலும்

தோயும் மலர் மொய்த்து தேன் குடிக்கும் வண்டுகளின் கூட்டமும்

வாயும் மது அருந்தத் திறந்தால் உட்புகுமென்று ஒருத்தி கருதி

சாயும் செங்கழுநீர்க் குழலெடுத்து அதன் மூலம் உறிஞ்சினாள்....






பாடல்:

வான்தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்

ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்...




விளக்கம்:

உலோபிகளிடம் பொருந்திய பெருஞ்செல்வத்தை பெறுவதற்காக விரும்பி

வந்துள்ள யாசகர்கள் போல்பிரிய மாட்டாமல் வான் அளவும் மொய்த்துக்

கொண்டுள்ள வண்டுகளின் கூட்டம் கண்ட ஒருத்தி தேன் சொரிகின்ற

தாமரைப் பூப் போன்ற தன் சிவந்த வாயை திறந்தால் வண்டுகள் உட்சென்று

விடுமென்று நாணமுற்று கிண்ணத்தில் ஊன்றி வைத்த செங்கழுநீரின்

தண்டினால் மதுவை உறிஞ்சி உண்டாள்...

வண்டுகளையும் உட்கொள்ள நேரும் அபாயம் உள்ளது மது உண்ணும்

பழக்கம் என்றதன் இழிவைச் சுட்டிக் காட்டுகிறார் கம்பன். இன்று

குளிர்பானங்களை பல்லில் படாமல் உறிஞ்சி குழலால் பருகும்

அன்றே இருந்ததை அறிக...

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினெட்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



கண்மயக்கம் கொள்ளும் கோல மூக்கினாள் ஒருத்தி தான்

உண்மயக்கம் கொள்ளும் மதுவாலே முன்கை நடுங்கத்

தண்மயக்கம் கொடுக்கும் மது சிந்தியதை அறியாதவளும்

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...



எள்ளுப்பூ நாசியாள் ஒருத்தி முன்கை தள்ள குளிர்ந்தக்

கள்ளுப்பூ விரியும் மயக்கத்தில் மதுவும் ததும்பிச் சிந்தும்

உள்ளப்பூப் படையும் வண்ணம் மயங்கித் திளைக்கும் மது

வெள்ளத்தில் இதழின் கீழ்மேலாகக் கிண்ணம் வைத்தாள்...



மூக்குத்தி அணிந்த எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி தன்

போக்குத்தி அறியாத மயக்கத்தில் முன்கைத் தடுமாறும்

நாக்குத்தி வழிசெல்லாது இழியும் மதுவறியாது தலைகீழ்

தூக்கிய கிண்ணத்தைத் தன் இதழில் வைத்து அருந்தினாள்...



முந்தியது மயக்கம் தரும் எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி

அந்தியது வழங்கும் மதுவின் நினைப்பால் முன்கையில்

ஏந்தியதும் அறியாது மயக்கும் மதுவும் தன்கை மீறியதில்

சிந்தியதும் தெரியாது கிண்ணந்தனை வாய் வைத்தாள்...



ருதுவழங்கும் உருமயக்கத்தையும் மீறும் ஒருத்தித் தன்னெழில்

அதுவழங்கும் ஒருமயக்கத்தின் துணையாகக் கிண்ணந்தனிலே

மதுவழங்கும் பெருமயக்கத்திற்கு இணையாக எண்ணந்தனிலே

எதுவழங்கும் கருமயக்கமும் இதற்கீடாமோ என்று அருந்தினாள்...






பாடல்:

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி முன்கை

தள்ள தண் நறவை எல்லாம் தவசிடை உகுத்தும் தேறாள்

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உப்புறத்து உண்டு என்று எண்ணி

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள்...




விளக்கம்:

எள்ளுப் பூப்போன்ற அழகிய மூக்கினையுடையாளாய் அணிகலம் பூண்டாள்

ஒருத்தி முன்னங்கை நடுங்கியதால் குளிர்ந்த மது முழுவதும் தன் இருப்பிடத்தில்

சிந்திவிட்டதை சிறிதும் உணராதவளாய் உள்ளத்தில் உள்ள மதுவின் மயக்கத்தினால்

மதுக் கிண்ணத்தின் பின்புறத்தில் மதுவிருக்கும் என்று கருதி கிண்ணத்தை கீழ் மேலாகக்

பிடித்துக் கொண்டு மணி போன்ற சிவந்த அதரத்தில் வைத்துக் கொண்டாள்...



மயக்கத்தில் மதுவுண்டு தான் தலை கீழானாள்...

தயக்கத்தில் அதுவுண்டு தன் நிலைப் பாழனாள்...

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினேழாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




கள்ளூற்றிய கிண்ணத்தில் தன் முகம் கண்ட மங்கையொருத்தி

உள்ளூற்றிய மதுவின் உணர்வால் மதியென மயங்கி உள்ளத்தின்

உள்வீற்றிருக்கும் துணைவனோடு ஊடல் நீங்கிய தேடல் கொண்டு

பள்ளிகொள்ள வெட்பு நீங்கிக் குளிர் தந்தால் மதுதருவேன் என்றாள்...



ஆடல் கொள்ளும் மங்கை உண்மதுவெறியில் கிண்ணத்தின் உள்

ஊடல் தெரியும் தன் முகப் பிம்பத்தை மதியெனவே நினைந்து

கூடல் கொள்ளும் பொருட்டுத் துணைவனோடு மகிழ்ந்திருக்க

சாடல் ஆனாள் தண்மதியானால் மதுவார்ப்பேன் உனக்கென்று...



கயல் விழியாள் ஒருத்தி மதுவுண்ட மயக்கத்தில் அந்தி வான

வியல் விடுத்து மதியானது கிண்ணத்தில் வீழ்ந்ததென முகச்

சாயல் கண்டு சாடினாள் வெப்பம் நீங்கிக் குளிர்வித்தால் தான்

மையல் கொண்டு மகிழ்ந்து மது உனக்கு வார்ப்பேனென்றாள்...



கிண்ணத்தில் தன் முகம் கண்ட ஒருத்தி மது மயக்கத்தில்

விண்ணகத்தின் நிலவு ஆசை கொண்டு வீழ்ந்ததெனத் தன்

எண்ணத்தில் நினைந்து துணைவனோடு காதல் கொள்ளும்

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...



உண்மது உள்ளூறிய மயக்கத்தில் தன் முகப் பிம்பத்தைப்

பெண்மதி ஒருத்தி மதுக் கிண்ணந்தனில் கண்டதும் அந்தி

விண்மதி என நினைந்து ஊடலின் பின்வரும் மையலைத்

தண்மதியாகிக் குளிர்வித்தால் மது தருவேன் என்றாளவள்...






பாடல்:

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன முகத்தை நோக்கி

விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி

'உள் மகிழ் துணைவனோடு ஊடு நாள். வெம்மை நீங்கி

தண் மதி ஆகின் யானும் தருவென் இந் நறவை' என்றாள்...




விளக்கம்:

ஒரு மங்கையானவள் கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே

கள் வெறித் தோன்றும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்டு விண்ணில்

இருக்கும் மதி மதுவின் ஆசையால் கிண்ணத்துள் மதுவுண்ண வந்து வீழ்ந்து

கிடக்கிறது என நினைத்து மன மகிழ்ச்சி கொடுக்கும் என் கணவனோடு ஊடல்

கொள்ளும் காலத்து உன் இயல்புக்கு மாறாக வெப்பம் தருவதை நீக்கி குளிர்ந்த

நிலவாக நடந்து கொள்வாயானால் இம்மதுவை உனக்கு நல்குவேன் என்றாள்...



கள்ளூறியதால் மயங்கும் நிலைக்கு மாறினாள் - உள்ளத்தில்

உள்ளூறியதால் மறக்கும் நிலைக்கு மாறினாள் - நினைவில்

விண்மதியின் இயல்பு நிலையை மாற்றினாள் - வள்ளத்தில்

பெண்மதிதன் செயல் நிலையை ஏமாற்றினாள்...

கழுத்தணி கழற்றி கூந்தலில் மாலையென சூடிக் கொண்டாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினாறாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



தலைக்கிடுவதை தன் நிலையிழந்து இடையின் மே

கலைக்கிடுவாள் மயங்கி கலையகற்றி ஆசையின்

வலைக்குள் விழுந்து கழுத்தணியை கூந்தலிடுவாள்

முலைக்கிடும் மலர்மாலைதனை இடைக்கிடுவாள்...



தடமேறிய அழகெலாம் குவிந்த இடையுடையாள் ஒருத்தி

விடமீறிய அமிழ்தினும் தீஞ்சொல்லும் தடுமாறி மயங்கி

தடமாறி இடையின் கலையகற்றி அதன் நிலையகற்றி

இடமாற்றி மலரணிந்து கழுத்தணி கூந்தல் புனைந்தாள்...




மின்னல் என நெளியும் இடையுடையாள் மது மயக்கத்தில் 

இன்னமுதச் சொல்லெடுத்து நிலை தடுமாறி இடையணிச்

சின்னமான மேகலை நீக்கி மலர் மாலை அணிந்தாளன்ன

பொன்னரி மாலைதனை சுருள்கூந்தலில் சூடிக் கொண்டாள்...



நுடங்கும் மின் இடையாள் ஒருத்தி மயங்கும் ஆசைக்குள்

அடங்கா இன் அமுதச் சொல்லிடைத் தடுமாறி இடையின்

படங்காட்டும் கலைநீக்கியதில் மலர்மாலை அணிந்தாள்

தொடர்ந்து கழுத்தணி மாலைதனை கூந்தலில் சூடினாள்...



கொழுத்த அழகிருந்து கொல்லும் மின்னல் இடையாள் ஒருத்தி

பழுத்த கனிவாய்ச் சொல்லும் தடுமாறி காலிடையின் நடுவில்

அழுத்தம் கொடுத்த கலைவிலக்கி பூமாலை அணிந்தாள் அடுத்து

கழுத்தணி கழற்றி கூந்தலில் மாலையென சூடிக் கொண்டாள்...



இருண்ட வானில் திரண்ட மின்னல் கொடி இடையாள் ஒருத்தி

மருண்ட மதுமயக்கத்தில் இனித்தவாய்ச் சொல்லும் தடுமாறி

மருங்கிலணிந்த கலைநீக்கி மலர்மாலை அணிந்து கழுத்தணி

சுருண்ட கூந்தலில் புனைந்து தடமாற்றியதை இடமாற்றினாள்...



இடையது மின்னல் பழிக்கும் பின்னற்கொடியாள் ஒருத்தி

தடையேதும் இல்லாது இன்சொலும் தடுமாறி இருகாலுக்கு

இடையணிந்த கலையகற்றி அங்கே மலர்மாலை அணிந்து

விடையேதும் இல்லாது கழுத்தணி கூந்தலில் புனைந்தாள்...






பாடல்:

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை

இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன

வன்ன மேகலையை நீக்கி மலர்த்தொடை அல்குல் சூழ்ந்தாள்

பொன்னரி மாலை கொண்டு புரிகுழல் புனையலுற்றாள்...




விளக்கம்:

மின்னல் என நெளிகின்ற இடையினை உடையாள் ஒருத்தி வெண்ணிற

இனிய அமிழ்தம் போன்ற செவ்விய பேச்சு (மதுவின் மயக்கத்தால்)

இடையில் குழறுண்டு தனது இடைப் பகுதியில் அணிந்திரிந்த அழகிய

மேகலையைக் கழற்றி விட்டு அங்கே மலர் மாலையைச் சுற்றிக்

கொண்டாள். அதுமட்டுமல்லாது கழுத்தணியாகிய பொன் அரி மாலையை

எடுத்துச் சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்.



திருக்குற்றாலக் குறவஞ்சியிலே இது மாதிரி பவனி காண வந்த

பெண்களின் நிலையை திரிகூடராசப்ப கவிராயர்.இவ்வாறு விளக்குகிறார்:


இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடைத் தொடுவார் பின்

இந்தவுடை ரவிக்கையென சந்தமுலைக் கிடுவார்...



மாரினில் அணிய வேண்டிய ரவிக்கையை இடையினில் அணிய வேண்டி

இடைத் தொடுவார் பின்னால் அதனை ரவிக்கையெனக் கருதி சந்தம் எழுப்பும்

முலைக்கு மேல் அணிவார் தனை மறந்த பெண்கள்...



இடையின் மே கலைக்கிடுவதை முலைக்கிடுவார்

இடையின் மேல் முலைக்கிடுவதை கலைக்கிடுவார்...

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினைந்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



வேய்ந்த பூப்பந்தலின் கீழ் பொழியும் நிலவொளியை ஆற்றில்

பாய்ந்த வெள்ளந்தனில் தோன்றும் சுழிபோலும் உந்தியாள்

காய்ந்த வயிற்றில் வழியும் மதுவென்று எண்ணித் தானும்

ஓய்ந்த மதியின் மயக்கத்திலே பிடித்து அருந்த முற்பட்டாள்....




பொதுவென்று பூந்தேன் பொழியும் பந்தலின் கீழ் மங்கையவள்

எதுவென்றும் அறியாது செழித்த நிலவொளியை மதுக்கிண்ணத்தில்

மதுவென்று அதனைப் பருகிடவும் ஆசையால் நெஞ்சம் உருகிடவும்

அதுவென்று மறந்தவளும் ஆவல் கொண்டு பிடிக்க முயன்றாள்...



அழிகின்ற ஆற்று நீர்போல் உந்திச் சுழியுடையாள் ஒருத்தி தேன்

பொழிகின்ற பூப்பந்தலின் கீழ் செழித்த நிலவொளியைப் பொங்கி

வழிகின்ற வெண்ணிற மதுவென்றே அவளும் மதுக் கிண்ணந்தனில்

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...



ஆற்று நீர்த் தோன்றும் சுழிபோல் உந்தியாள் ஒருத்தி மது

ஊற்றும் கிண்ணந்தனில் தோன்றும் செழித்த நிலவின் வெண்

கீற்று தனை மதுவென்று எண்ணித் தானும் மதிமயங்கி அதை

ஏற்றும் பேதைமையாலும் அறிவிழந்தும் அருந்த முற்பட்டாள்...



உந்தியது அழியும் ஆற்றுநீர்ச் சுழி போல் கொண்ட ஒருத்தி

பந்தலின் கீழ் தேன் சொரியும் இடைவெளியில் நிலவொளியும்

முந்தியது கிண்ணந்தனில் மதுவென்று தோன்றும் பிம்பந்தனை

பந்தியிலே வைத்து அருந்த மயங்கித் தானும் பிடிக்க முயன்றாள்...



உருவாகும் ஆற்றுநீர்ச் சுழி போல் தோன்றும் உந்தியாள் ஒருத்தி

தருவாகும் பந்தலின் கீழ் தேன் பொழியும் இடைவெளியில் நிலவில்

உருவாகும் ஒளியதனை மதுவென்று எண்ணி கிண்ணந்தனில் பிடித்து

பெருகும் தன் பேதைமையாலும் மயங்கி அருந்தவும் முற்பட்டாள்...




பாடல்:


அழிகின்ற அறிவினாலோ பேதைமையாலோ ஆற்றில்

சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன்

பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரித்துக் கீழ்வந்து

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள்...



விளக்கம்:

ஆற்று வெள்ளத்தில் உண்டாகின்ற நீர்ச் சுழியானது ஓரிடத்தில் நிலைத்து

நிற்பதைப் போன்ற கொப்பூழையுடையாள் ஒருத்தி செந்நிறத் தேனைச்

சொரிகின்ற பூக்களால் வேயப் பெற்றுள்ள பந்தலை துளைத்துக் கொண்டு

கீழிறங்கும் செழுமை மிக்க நிலவொளியை மதுவுண்டதனால் அறிவு

அழிந்ததனாலோ இல்லைப் பெண்களுக்கே உரிய பேதைமைக் குணத்தினாலோ

மதுவென்று மயங்கி மதுக் கிண்ணந்தனில் பிடிக்க முயன்றாள்...

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினான்காவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



பாம்புக்கு அஞ்சிய நிலவை மதுவினில் கண்ட மங்கை ஒருத்தி அதுவும்

பிம்பம் என்று அறியாது அவளும் மயங்கிக் கண் பொருத்தி அதற்கும்

தான்புக்க இடம் தந்து காப்பதாகவும் இனியும் அஞ்சாமல் எதற்கும்

வான்புக்க வேண்டாம் நானிருக்கின்றேன் என்று கட்டளையிட்டாள்...




களித்த மங்கையவள் கண் மயங்க கனங்குழை செவியிலே முயங்க

புளித்த கள்ளின் போதையிலே அதனுள்ளே தோன்றுகின்ற மதிக்கும்

அளித்தனள் அபயம் பாம்புகளுக்கு அஞ்சியே நிலவும் வந்தங்கே

ஒளிந்ததைக் கண்டு அஞ்சாதே! என்று இன்மொழிகள் கூறினாள்...



உபாயம் அளித்து உள்ளுக்குள் மயங்கும் மதுவின் காட்சியில்

அபாயம் என்ற பாம்புகளுக்கு அஞ்சிய நிலவும் கிண்ணந்தனில்

அபயம் என்றே ஒளிந்ததென்று அவளும் அதனைப் பார்த்து

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...



குழையணிந்த ஒருத்தி தானும் மதுவருந்திய மயக்கத்தின்

பிழையறியாது மதுவினுள் தோன்றும் நிலவின் பிம்பத்தை

குழைந்து இரக்கம் கொண்டு அரவுக் கஞ்சிய நிலவின்பயம்

கழைந்திட அவளும் அஞ்சாதே என்று அபயம் அளித்தனள்...



கண் மயங்கும் கனங்குழையாள் ஒருத்தி மதுவினுள் அந்தி

விண் மயங்கும் நிலவும் விழுங்க வரும் பாம்புக்கு அஞ்சியே

வீண் பயந்து புகுந்ததென்றும் தானதற்கு தஞ்சம் அளிக்கவல்ல

பண் மயங்கும் மொழிகள் கூறி வானெதற்கு என்று தேற்றினாள்...



கனங்குழை காற்றிலாட மயங்கும் கண் மது ஊற்றிலாட கொடுஞ்

சினங்கொண்ட அரவினுக்கு அஞ்சிய நிலவும் மதுவினுள் தோன்ற

மனங்குழை மங்கையவள் அஞ்சாதே அரவு கண்டு இரவு உண்டு

தனங்கொண்ட நான் உனக்கு தஞ்சம் அளிப்பேன் என்று கூறினாள்...





பாடல்:

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனங்குழை கள்ளின் உள்ளால்

வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி

அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து

ஒளித்தனை; அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்துகின்றாள்...




விளக்கம்:


அங்கே பொன்னாலியென்ற குழையணிந்த ஒருத்தி மதுவின் உள்ளே

பிரதிபலித்துத் தோன்றுகின்ற அழகிய நிலவின் பிம்பத்தை மதுவுண்டதனால்

வந்த களிப்பு தன கண்களில் தோன்றுமாறு பார்த்து மதியே நீ வானத்தில்

உன்னைத் தீண்ட வரும் பாம்புகளுக்கு அஞ்சியே இங்கு வந்து ஒளிந்திருக்கிறாய்,

ஆகையால் நான் உனக்கு அபயம் அளித்தேன் எனவும் அஞ்சாதே நான் இருக்கிறேன்

என்று இனிய மொழிகளும் கூறுகின்றாள்.