கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே
பத்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
மதுவுண்டால் ஏற்படும் தடுமாற்றங்களும் மயக்கத்தில்
அதுவுண்டால் தொடரும் நிழலின் தடமாற்றங்களும்
எதுவுண்டாலும் வருவதில்லையென மடங்கொண்டு
மாதுவுண்டாலும் தோற்குமே அத்தனையும் அங்கே!
விடத்தைப் பழிக்கும் விழிகளும் அமிழ்தென இனிக்கும் மொழிகளும்
இடத்தை விட்டு விலகா மகளிரும் வாள் பழிக்கும் நெற்றியுடன் தன்
தடத்தைப் பழிக்கும் நிழலை பொன்மதுக் கிண்ணத்தில் நோக்கும்
மடத்தை விட்டு அகலாது தோழியை உண்ண அழைப்பதென்ன...
விரும்பாதார்க்கு விடம்போல் விழியும் தன்னழகைப் பார்த்துத்
திரும்பாதார்க்கு தடம்போல் நிழலுடைய மகளிரும் காதல்மனம்
அரும்பாதார்க்கு கரும்பென இனிக்கும் மொழியும் பேசி மதுவுண்ண
பெரும்பாலும் கிண்ணந்தனைக் கண்டு தோழியை அழைப்பதென்ன...
விடம் கொண்ட விழிகளும் பலவிதம் செய்யும் முன்னழகின்
தடம் கொண்ட நிழலினை மதுகிண்ணத்தில் கண்ட மகளிரும்
மடம் கொண்ட நோக்கிலே தன் தோழியரை உண்பதற்கு தன்
இடம் கொண்ட மதுவுண்ண மயங்கி தானும் அழைப்பதென்ன...
விரியாத மலர்மொக்கனைய நஞ்சுமிழும் விழிகளும் தெரிந்தும்
தெரியாத தன்னழகை மீட்டும் நிழலை மதுக்கிண்ணத்தில் கண்டுப்
புரியாத மயக்கம் தானும் கொண்டு தோழியை துணைக்கழைத்துப்
பிரியாத மடத்தைப் பேணும் விதத்தில் பேதையும் திகழ்வதென்ன...
வாள் நுதல் மங்கையொருத்தி மதுவுண்ணும் மயக்கத்தில் தன்
தாள் முதல் தலை வரை தள்ளாடும் அதன் இயக்கத்தில் பொன்
வள்ளத்திலே தன்னிழல் கண்டு தன்னிகரில்லா அழகைக் கொண்ட
உள்ளத்திலே உவகையுடன் தோழியை உண்ண அழைப்பதென்ன...
பாடல்:
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டே? - வாள் நுதல் ஒருத்தி காணா
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி! என்றாள்...
விளக்கம்:
வாள் போன்று ஒளி பொருந்திய நெற்றியுடையாள் ஒருத்தி தன்னை போலே
அழகின் பெருமையை ஒத்திருக்கும் தனது நிழலை பொன்னால் செய்யப்பட்ட
குளிர்ந்த மணமுள்ள மதுவுண்ணும் கிண்ணத்தில் கண்டு தோழியே! என்னோடு
சேர்ந்து நீயும் இம்மதுவை உண்ணுவாய்! என்று வேண்டினாள்.
விரும்பாதார்க்கு நஞ்சனைய நீண்ட விழிகளையும் உண்பார் தம்மை நீண்டு
வாழ்விக்கும் அமிழ்தம் போலவும் கேட்பார் தம் செவிக்கு நெடு நாள் இனிக்கும்
இன்மொழியும் உடைய மகளிருடைய அறியாமை போன்ற அறியாமை வேறு
எவரிடத்தும் உண்டோ?