கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே
பன்னிரெண்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
உட்கொள்ளும் முன் மதுக் கிண்ணத்தில் நிலாக் கதிர்கள்
ஆட்கொள்ளும் வண்ணத்தில் வேல் விழியாள் ஒருத்தி
நாட்கொண்ட மதுவின் மயக்கத்தை வாய்க் கொண்டு
நாண்கொண்டு மனதுக்குள்ளே நகைக் கொண்டாள்...
வார்க்கும் முன் தலையேறும் மதுவின் மயக்கத்தில்
யார்க்கும் தன் வேல்விழியால் இன்னல் விளைவித்துப்
பார்க்கும் மங்கையவள் நிலாக் கதிரில் கிண்ணமதைச்
சேர்க்கும் வாயும் உறிஞ்சியது மதுவென்று அறியாது...
தலையேறும் மயக்கமும் மது உண்ணும் முன்னர்
கொலையூறும் வேல்விழியாள் ஒருத்தி தன்னுள்ளே
நிலைமீறும் நிலவின் ஒளிவெள்ளத்தில் வள்ளத்தின்
கலையேறும் மதுவென்றே வாய் வைத்து நாணினாள்...
மறம் பொங்கும் கொலை புரியும் வேல் விழியாள் ஒருத்தி
புறம் எங்கும் மயக்கம் மனம்புரள விண்ணில் நிலவும் வெண்
நிறம் கொண்ட கதிர் வீசுமதுக் கிண்ணத்தை நிரப்பும் அந்தத்
திறம் கண்ட தானும் மதுவென்றே வாய்வைத்து உறிஞ்சினாள்...
பக்கத்தில் உள்ளவர்களைப் பார்வையால் கொல்லும் ஒருத்தி
துக்கத்தையும் மறக்கடிக்கும் மதுக்கிண்ணத்தைக் கைப்பிடித்து
சொர்க்கத்தில் விளங்கும் நிலவொளியைத் தான் மதுவென்ற
வெட்கத்தையும் மீறி வாய்ச் சுவைக்க உண்டு மகிழ்ந்தாள் ...
கொடுங்கண்ணாள் ஒருத்தி கொள்ளும் மயக்கத்தில் தன்
இடங்கொண்ட கிண்ணத்தில் பரவும் நிலவின் ஒளியும்
தொடும்வண்ணம் மது நிரம்பியது போல் தோன்றுமதை
விடங்கொண்ட நாகம் விழுங்குதல் போலே பருகினாள்...
பாடல்:
புறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற
நறவு என அதனை வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள்...
விளக்கம்:
கொடுமை திகழும் கொலைத் தொழிலை புரியும் வேல் போன்ற
கண்ணினை உடைய வேறு ஒரு மங்கை தான் ஏந்திய மணிகள்
பதித்த பளிங்கு மதுக் கிண்ணத்தில் வெண்ணிற நிலாக் கதிர்கள்
பாய்ந்ததனால் அந்த பளிங்குக் கிண்ணத்தில் மது நிறைந்து
இருப்பது போலத் தோன்றியதனால் மதுவென்று கருதி
அக்கிண்ணத்தை வாயில் வைத்தாள்; பக்கத்தில் உள்ளவர்கள்
எல்லோரும் வெறுங் கிண்ணத்தை இவள் வாய் வைத்து
உறிஞ்சுவது கண்டு நகைத்து இகழ தானும் தன்னுள்ளே
நாணம் மிகக் கொண்டாள்...
மது உட்புகும் முன் மயக்கம் உட்புகுந்து அதனை உட்கொள்ளும்
முன் நிலாக் கதிர்களை உட்கொண்டதால் நாணம் அவளை
ஆட்கொண்டது எனலாம்....
No comments:
Post a Comment