கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே
பதினொன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
கண்ணெனும் வேல்தனில் நஞ்சு பூசியும் கூந்தல் முடிந்து
பண்ணெனும் நகையுடன் நங்கையும் தள்ளாடும் நடையிலும்
கிண்ணெனும் மதுவுண்ட கிரக்கத்தில் தன்னிழல் நோக்கியே
உண்ணென்று உரைக்கின்றாள் தன்னையும் தான் மறந்தே!
இத்து விடுமெனும் இடையுடையாள் அணங்கொருத்தி
கொத்து மலர்க்கூந்தலுடன் விடம் பூசிய வேல் விழிகளும்
பூத்து குலுங்கும் புன்னகையுடன் மதுவள்ளம் தனை நோக்கி
பித்து பிடித்து தன் நிழலை எச்சில் நுகர்கின்றாய் என்றாளே!
ஒடிந்து விழும் இடையுடனே தெய்வப் பெண்ணொருத்தி
முடிந்தக் கூந்தலுடன் நஞ்சு தீட்டிய வேல் விழிகளுடன்
படிந்த முகப் புன்னகையுடன் மதுக்கிண்ணம் பார்த்துக்
கடிந்து கொண்டாள் மிச்சமுண்ணும் தன் நிழலென்றே!
அச்சுறுத்தும் மெல்லிடையாள் தன் மலர்க் கூந்தல் திருத்தியே
நச்சுறுத்தும் வேல்விழியுடனே மென்னகைக் கூடிய ஒருத்தியும்
இச்சையுடன் மதுக் கிண்ணத்தினுள் பொருந்திய தன் நிழலை
எச்சிலுடன் இருக்கும் இம் மதுவுண்ண வந்தாயோ என்றாளே...
அஞ்சும் இடையும் கெஞ்சும் நடையும் மேகக் கூந்தல் படையும்
நஞ்சும் பூசிய வேல்விழியும் புன்னகையால் பேசும் ஒருத்தி தான்
கொஞ்சம் மதுவெடுத்து அருந்துகையில் கிண்ணந்தனில் நோக்கியே
எஞ்சும் மதுவருந்த எனக்குப் போட்டியாக ஏன் வந்தாய் என்றாளே!
தொகுத்த கூந்தலுடன் முறியும் இடையுடனே மங்கையொருத்தி
பகுத்த வேல்விழியில் பூசிய நஞ்சும் புன்னகைக் கொஞ்சும் எழிலும்
மிகுந்த மதுவுண்ணும் வேளையிலே கிண்ணந்தனில் நிழல் நோக்கித்
தகுந்த இன்னொருத்தி தானுண்ட எச்சிலுண்ண வந்தாளே என்றாள்...
பாடல்:
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு அனாள் அளகபந்தி
நச்சுவேல் கருங்கண் செவ்வாய் நளிர்முகம் மதுவுள் தோன்ற
"பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க வாளா
எச்சிலை நுகர்தியோ?" என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள்.
விளக்கம்:
இது முறிந்துவிடக் கூடும் எனக் கண்டார் அஞ்சுறும் வகையில் நுண்ணிய
இடையுடையாளாய் தெய்வப் பெண் போன்றிருக்கும் ஒருத்தி தன் கூந்தல்
தொகுதியும் நஞ்சு பூசிய வேல்போன்ற கருங்கண்களும் சிவந்த வாயும்
புன்னகையோடு கூடிய முகமும் பருகும் மதுக் கிண்ணத்தில் பிரதி பிம்பமாய்
தோன்றும் அதனைப் பார்த்து பித்துப் பிடித்தவளே? நீ என்ன செய்கிறாய்
இதோ இச்சாடியில் மிகுந்த அளவில் மதுவிருக்க அதனை உண்ணாமல்
வீணே நான் உண்ட எச்சில் மதுவையா நுகர்கின்றாய் என்று தன் நிழலை
வேறொரு பெண்ணாய்க் கருதி பற்களாகிய முல்லை அரும்புகள் வெளித்
தோன்ற ஒளிரச் சிரித்தாள்...
No comments:
Post a Comment