Sunday, November 24, 2013

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினைந்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



வேய்ந்த பூப்பந்தலின் கீழ் பொழியும் நிலவொளியை ஆற்றில்

பாய்ந்த வெள்ளந்தனில் தோன்றும் சுழிபோலும் உந்தியாள்

காய்ந்த வயிற்றில் வழியும் மதுவென்று எண்ணித் தானும்

ஓய்ந்த மதியின் மயக்கத்திலே பிடித்து அருந்த முற்பட்டாள்....




பொதுவென்று பூந்தேன் பொழியும் பந்தலின் கீழ் மங்கையவள்

எதுவென்றும் அறியாது செழித்த நிலவொளியை மதுக்கிண்ணத்தில்

மதுவென்று அதனைப் பருகிடவும் ஆசையால் நெஞ்சம் உருகிடவும்

அதுவென்று மறந்தவளும் ஆவல் கொண்டு பிடிக்க முயன்றாள்...



அழிகின்ற ஆற்று நீர்போல் உந்திச் சுழியுடையாள் ஒருத்தி தேன்

பொழிகின்ற பூப்பந்தலின் கீழ் செழித்த நிலவொளியைப் பொங்கி

வழிகின்ற வெண்ணிற மதுவென்றே அவளும் மதுக் கிண்ணந்தனில்

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...



ஆற்று நீர்த் தோன்றும் சுழிபோல் உந்தியாள் ஒருத்தி மது

ஊற்றும் கிண்ணந்தனில் தோன்றும் செழித்த நிலவின் வெண்

கீற்று தனை மதுவென்று எண்ணித் தானும் மதிமயங்கி அதை

ஏற்றும் பேதைமையாலும் அறிவிழந்தும் அருந்த முற்பட்டாள்...



உந்தியது அழியும் ஆற்றுநீர்ச் சுழி போல் கொண்ட ஒருத்தி

பந்தலின் கீழ் தேன் சொரியும் இடைவெளியில் நிலவொளியும்

முந்தியது கிண்ணந்தனில் மதுவென்று தோன்றும் பிம்பந்தனை

பந்தியிலே வைத்து அருந்த மயங்கித் தானும் பிடிக்க முயன்றாள்...



உருவாகும் ஆற்றுநீர்ச் சுழி போல் தோன்றும் உந்தியாள் ஒருத்தி

தருவாகும் பந்தலின் கீழ் தேன் பொழியும் இடைவெளியில் நிலவில்

உருவாகும் ஒளியதனை மதுவென்று எண்ணி கிண்ணந்தனில் பிடித்து

பெருகும் தன் பேதைமையாலும் மயங்கி அருந்தவும் முற்பட்டாள்...




பாடல்:


அழிகின்ற அறிவினாலோ பேதைமையாலோ ஆற்றில்

சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன்

பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரித்துக் கீழ்வந்து

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள்...



விளக்கம்:

ஆற்று வெள்ளத்தில் உண்டாகின்ற நீர்ச் சுழியானது ஓரிடத்தில் நிலைத்து

நிற்பதைப் போன்ற கொப்பூழையுடையாள் ஒருத்தி செந்நிறத் தேனைச்

சொரிகின்ற பூக்களால் வேயப் பெற்றுள்ள பந்தலை துளைத்துக் கொண்டு

கீழிறங்கும் செழுமை மிக்க நிலவொளியை மதுவுண்டதனால் அறிவு

அழிந்ததனாலோ இல்லைப் பெண்களுக்கே உரிய பேதைமைக் குணத்தினாலோ

மதுவென்று மயங்கி மதுக் கிண்ணந்தனில் பிடிக்க முயன்றாள்...

No comments:

Post a Comment