பதினாறாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
தலைக்கிடுவதை தன் நிலையிழந்து இடையின் மே
கலைக்கிடுவாள் மயங்கி கலையகற்றி ஆசையின்
வலைக்குள் விழுந்து கழுத்தணியை கூந்தலிடுவாள்
முலைக்கிடும் மலர்மாலைதனை இடைக்கிடுவாள்...
தடமேறிய அழகெலாம் குவிந்த இடையுடையாள் ஒருத்தி
விடமீறிய அமிழ்தினும் தீஞ்சொல்லும் தடுமாறி மயங்கி
தடமாறி இடையின் கலையகற்றி அதன் நிலையகற்றி
இடமாற்றி மலரணிந்து கழுத்தணி கூந்தல் புனைந்தாள்...
மின்னல் என நெளியும் இடையுடையாள் மது மயக்கத்தில்
இன்னமுதச் சொல்லெடுத்து நிலை தடுமாறி இடையணிச்
சின்னமான மேகலை நீக்கி மலர் மாலை அணிந்தாளன்ன
பொன்னரி மாலைதனை சுருள்கூந்தலில் சூடிக் கொண்டாள்...
நுடங்கும் மின் இடையாள் ஒருத்தி மயங்கும் ஆசைக்குள்
அடங்கா இன் அமுதச் சொல்லிடைத் தடுமாறி இடையின்
படங்காட்டும் கலைநீக்கியதில் மலர்மாலை அணிந்தாள்
தொடர்ந்து கழுத்தணி மாலைதனை கூந்தலில் சூடினாள்...
கொழுத்த அழகிருந்து கொல்லும் மின்னல் இடையாள் ஒருத்தி
பழுத்த கனிவாய்ச் சொல்லும் தடுமாறி காலிடையின் நடுவில்
அழுத்தம் கொடுத்த கலைவிலக்கி பூமாலை அணிந்தாள் அடுத்து
கழுத்தணி கழற்றி கூந்தலில் மாலையென சூடிக் கொண்டாள்...
இருண்ட வானில் திரண்ட மின்னல் கொடி இடையாள் ஒருத்தி
மருண்ட மதுமயக்கத்தில் இனித்தவாய்ச் சொல்லும் தடுமாறி
மருங்கிலணிந்த கலைநீக்கி மலர்மாலை அணிந்து கழுத்தணி
சுருண்ட கூந்தலில் புனைந்து தடமாற்றியதை இடமாற்றினாள்...
இடையது மின்னல் பழிக்கும் பின்னற்கொடியாள் ஒருத்தி
தடையேதும் இல்லாது இன்சொலும் தடுமாறி இருகாலுக்கு
இடையணிந்த கலையகற்றி அங்கே மலர்மாலை அணிந்து
விடையேதும் இல்லாது கழுத்தணி கூந்தலில் புனைந்தாள்...
பாடல்:
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர்த்தொடை அல்குல் சூழ்ந்தாள்
பொன்னரி மாலை கொண்டு புரிகுழல் புனையலுற்றாள்...
விளக்கம்:
மின்னல் என நெளிகின்ற இடையினை உடையாள் ஒருத்தி வெண்ணிற
இனிய அமிழ்தம் போன்ற செவ்விய பேச்சு (மதுவின் மயக்கத்தால்)
இடையில் குழறுண்டு தனது இடைப் பகுதியில் அணிந்திரிந்த அழகிய
மேகலையைக் கழற்றி விட்டு அங்கே மலர் மாலையைச் சுற்றிக்
கொண்டாள். அதுமட்டுமல்லாது கழுத்தணியாகிய பொன் அரி மாலையை
எடுத்துச் சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்.
திருக்குற்றாலக் குறவஞ்சியிலே இது மாதிரி பவனி காண வந்த
பெண்களின் நிலையை திரிகூடராசப்ப கவிராயர்.இவ்வாறு விளக்குகிறார்:
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடைத் தொடுவார் பின்
இந்தவுடை ரவிக்கையென சந்தமுலைக் கிடுவார்...
மாரினில் அணிய வேண்டிய ரவிக்கையை இடையினில் அணிய வேண்டி
இடைத் தொடுவார் பின்னால் அதனை ரவிக்கையெனக் கருதி சந்தம் எழுப்பும்
முலைக்கு மேல் அணிவார் தனை மறந்த பெண்கள்...
இடையின் மே கலைக்கிடுவதை முலைக்கிடுவார்
இடையின் மேல் முலைக்கிடுவதை கலைக்கிடுவார்...
No comments:
Post a Comment