Saturday, March 23, 2013

போற்றும் நிலவின் வீக்கத்தில் விளைந்த ஒளியே எனலாம்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே மூன்றாவது 

பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...


தசரதனின் சேனைகள் வந்து தங்கிய மதுக்கூடத்தின் எழிலையும்

நிலவின் ஒளி வெள்ளத்தில் நனைந்து கொண்டு  இருக்கும்

பூம்பொழிலையும் விளக்குகின்றது இப்பாடல்...



தசரதனின் சேனைகள் வந்து தங்கி இருக்கின்ற மடமானது

தாங்கும் நிலவொளியின் பெருக்கத்தால் மதுக்கூடமானது

ஆசைரதமேறி உலவிவர மயக்கம் ததும்பும் இடமானது

ஆளும் உணர்வுகள் நடத்தும் அந்தரங்கப் பாடமானது...



சிந்தனைப் பலவும் உள்ளத்தில் உதிக்க அதிலே மதுவின்

நிந்தனைச் சிலவும் உணர்வினை மீட்ட மயக்கத்தைத்

தந்தனை உலவும் மடந்தையரைத் தேடிக் கொண்டாடிட

வந்தனை நிலவும் வார்த்தது ஒளிவெள்ளத்தை இரவிலே...



மிகவும் ரம்மியமாக மதுவருந்தும் சூழலும் தோகை விரித்தாடி

அகவும் மயிலும் அழைக்கும் மந்தார மேகத்தின் நடுவிலே

புகவும் நிலவின் ஒளியானது எங்கும் வெண்மையாய் அதற்குத்

தகவும்  அழகைச் சொரிந்து ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்தது இரவு...



ஆற்றின் வெள்ளம் பொங்கிவரும் கங்கையைப் போலவும் பறை

சாற்றும் வண்ணம் திருப்பாற்கடலைப் போன்றது எனவும்  நின்று

கூற்றுவனை எட்டி உதைத்தவன் வாழும் கயிலையை ஒத்தது

போற்றும் நிலவின் வீக்கத்தில் விளைந்த ஒளியே எனலாம்... 



நதியின் வெள்ளம் எங்கும் வெண்மையாய்ப் புரண்டோடும்

கதியில் உள்ளம் பொங்கிப் பெண்மையும் திரண்டோடும்

மதியில் பள்ளம் பார்க்கப்  பெருகியெங்கும் உருண்டோடும்

விதியில் கள்ளும் கொஞ்சம் கலந்தது நிலவின் வீக்கம்...



ஊற்று வெள்ளம் போலெழுந்த மையலும் மெல்ல மெல்ல

ஆற்று வெள்ளம் போல் பிரவாகம் எடுத்து நிலவொளியின்

கீற்று வெள்ளம் எங்கும் பெருகியோடும் வெண்மையும் மது

ஊற்றின் உள்ளம் பொங்கி உணர்வும் உள்வாங்கியதன்றோ!





பாடல்:

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்

கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்

ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி 

வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே!



விளக்கம்:

நிலவின் ஒளிவெள்ளத்தில் ஆறுகள் எல்லாம் கங்கையாற்றை ஒத்து இருந்தன என்றும்;

கடல்கள் யாவும் திருப்பாற்கடலை ஒத்து இருந்தன என்றும்;

மலைகள் யாவும் வெள்ளிப்பனி மலையாகிய சிவா பெருமான் வாழும் கயிலாய மலையை

ஒத்து இருந்தது என்றும்; இவையாவும் சொல்லவொண்ணா அளவு வீக்கத்தில் பெருத்த

நிலவின் தோற்றத்தாலே விளைந்து  இருந்தது இரவுப் பொழுதாகும்...

No comments:

Post a Comment