Saturday, March 23, 2013

கடலாடிக் கரை காண மயங்கும் நிலவொளியில்...

கம்பராமாயணம், பால  காண்டத்திலே உண்டாட்டுப் படலத்தில்
இரண்டாவது பாடலை இங்கே பார்ப்போம்...
தசரதனின் சேனைகள் நீண்ட நெடு இரவிலே நிலவின் ஒளிவெள்ளத்தில்
மதுவை உண்டு மயக்கத்திலே மிதந்து கொண்டு இருந்தனர்.
மன்மதனின் வேண்டுதலுக்கு இணங்க உதித்த நிலவின் ஒளியானது
துணைவருடன் ஊடல்  (சண்டை) கொண்டவருக்கு கூடல் கொள்ளச்
சொல்லும் தூதுவனாகவும்,  இனிய கள்ளைப்  போலே இன்பத்தைத்
தருவதாகவும், பிரிந்து இருப்பவருக்கு உயிரைப் பறிக்கின்ற   
விடத்தைப் போலவும் நீண்ட நேரம் தண்ணொளி வீசி அந்த
இடத்தை அலங்கரித்த வண்ணம் இருந்தது.
மதுவருந்தினால் இன்ப வதை கூட தேவதையாகலாம்...
எதுவிருந்தாலும் இந்தக் கதை கூட பெருங்கதையாகலாம்...
பொதுவிலிருந்து அழைக்கும் யாமம் கூட காமம் ஆகலாம்...
அதுவிருந்தால் அலையும் வழிகள் கூட விழிகள் ஆகலாம்....
காற்றில் ஆடி விழுந்த நாணலும் நதியின் ஓட்டத்தில் மது
ஊற்றித் ததும்பி அசைகின்றதைப் போலே ஆட்டத்தில் ருது
ஏற்றித் தழுவத்  துடிக்கும் ஆசையும் நாட்டத்தில் மாதவளைப் 
பற்றிப் படர்ந்து கடலாடிக் கரை காண மயங்கும் நிலவொளியில்...
மங்கை முகம் கண்டோர்க்கு திரு மந்திரமும் தேவை இல்லை
மதுவை உண்டு கலந்தோர்க்கு ஒரு தந்திரமும் தேவை இல்லை
நங்கை சுகம் கொண்டோர்க்கு வேறு சுகம் தேவை இல்லை
நலத்துடன் கண்டு களித்தோர்க்கு வேறு யுகம் தேவை இல்லை...
தேடல் மிகுந்தோர்க்கு கிடைக்கின்ற திரவியமாய்
ஆடல் புகுந்தோர்க்கு இனிமைதரும் கள்ளுமாய்
ஊடல் பிரிந்தோர்க்கு உதவி செய்கின்ற தூதுவனாய்
கூடல் புரிந்தோர்க்கு நிலவும் மலர்ந்தது தோதுவாய்... 
அலந்தவர்க்கு அவர் வாய் விழுகின்ற கள்ளுமாய்
கலந்தவர்க்கு முன் போய் குத்தும் மோகமுள்ளுமாய் 
நலந்தவறும் மாந்தர்தம் நோய் தீர்க்கும் மருந்துமாய் 
மலர்ந்தது நிலவும் மாரன் கை தேர்ந்த வில்லுமாய்... 
சொல்லுக்குள் அடங்காமல் சுழல்கின்ற எண்ணமாய்
வில்லுக்குள் அடங்காமல் பாய்கின்ற அம்புமாய் 
புல்லுக்குள் அடங்காமல் பெய்கின்ற பனியுமாய்
செல்லுமிடத்தில் மலர்ந்தது காமமும் அம்புலியாய்...
பாடல்: 2
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது நெடு நிலா - மதனன் வேண்டவே
விளக்கம்:
ஆணும் பெண்ணுமாய் கூடி மகிழ்ந்து இருப்போர்க்கு இனிமை சேர்க்கும் மதுவாகவும் 
தன் துணையைப் பிரிந்து எண்ணி வருந்துவோர்க்கு உயிரைப் போக்கும் நஞ்சாகவும்
துணைவருடன் ஊடல் கொண்டவர்க்கு  உதவி செய்கின்ற புதிய தூதுவாகவும்
மன்மதனின் வேண்டுகோளுக்கிணங்க ஒளிமிக்க நிலவானது வானத்தில்  உதித்தது.

No comments:

Post a Comment