கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே
எட்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
மதுவின் குணமும் மங்கையவள் கைக்கொண்ட கிண்ணமும்
பொதுவில் சிவந்து விளங்கியதையும் உண்டதும் அதன்முன்
எதுவும் ஈடு இணையில்லை என்று மைக்கொண்ட செவ்விழியும்
மதுவும் மாதவளின் உள் திறமையை எடுத்து உரைக்குமன்றோ!
தாகம் கொண்டு மதுவிருக்கும் கிண்ணத்தைப் பருகவெழில்
தேகம் கொண்ட மடந்தைக் கரம் தூக்கியதால் சிவந்ததோடு
மோகம் கொண்ட மைக்கண்ணும் சிவந்திட உருகியதுவும்
யாகக் குண்டம் தனில் விழும் தேனெனும் அமிழ்தமானது...
தகுந்த அழகு மங்கைத் தன் கைக்கொண்டு தூக்கிய மது
மிகுந்த கிண்ணம் தானும் சிவந்ததோடு அல்லாமல் உள்
புகுந்து மயங்கும் மைக்கண்ணும் செந்நிறம் ஆக்கிய அது
வகுந்து உடலெங்கும் பரவசம் காணும் அமிழ்தமானது...
வலிந்த தாகத்தில் மங்கையும் மது பருகும் கிண்ணத்தைப்
பொலிந்த தேகத்தின் செங்கையும் பட சிவக்கப் பருகப்பருக
மெலிந்த நடையில் மைக்கண்ணும் சிவந்து உருக உருக
நலிந்த இடையில் மயக்கம் நிரப்பும் அமிழ்தானது அதுவும்...
கைக்கொண்ட மங்கையவளின் மதுக் கிண்ணம் சிவக்கவும்
கைக்கது அமிழ்தம் போல் விளங்கும் மயக்கத்தின் துவக்கமும்
மைக்கொண்ட விழிகளும் மதுவுண்டதால் சிவந்து உவக்கவும்
வைக்கும் உள்ளமதில் ஏதோதோ உணர்வுகளைத் தைக்கும்...
வாய்வழிப் புகுந்த மங்கையவள் அருந்திய மதுவானது
வளைக் கரம்பட்டதால் சிவந்த கிண்ணமும் மயக்கத்தில்
மைவிழியும் சிவக்கக் கொங்கையும் மோகத்தில் மெதுவாக
மையலை உட்கொண்டு உவகையில் திரண்டது அமிழ்தமாய்...
பாடல்:
உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்
கைக்கொள் வாள் ஒளிப்படச் சிவந்து காட்ட தன்
மைக்கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே...
விளக்கம்:
ஒரு மங்கையின் வாய் வழியாகப் புகுந்த மதுவானது அமிழ்தமாக
அவளுக்குள் விளங்கியது. சிந்திய பாலினை ஒத்து நிற்பது போன்ற
வெண்ணிற மதுவினை ஏந்திய மதுக்கிண்ணமும் சிவந்த கைகளால்
மதுவை எடுத்துப் பருக முற்பட்டதால் சிவந்து தோன்றியது. அவளுடைய
கருமை பூசிய கண்ணும் மதுவின் வேகத்தால் சிவந்து காணப்பட்டது.
No comments:
Post a Comment