Saturday, March 23, 2013

பூவிதழில் தேனுலவித் ததும்பும் அமிழ்தெனும் கள்ளருந்தி​னார்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஏழாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



ரம்பா ஊர்வசி மேனகையையும் வியத்தகு மங்கயரையும்

வம்புக் கிழுத்து ஊனுடற்கொண்டு அழகினைத் தாக்கும்

அம்பால் விழியும் மான்வென்றுத் தான்வெல்லும் நோக்கில்

தேம்பால் வழிந்திடும் பூவிதழால் மது அருந்தி மகிழ்ந்தனர்... 



விண்மீனுடைய வானுலக தேவியரும் வித்தியாதர பூவையரும்

பெண்ணுடல் எடுத்து வந்தால் பொருந்தாப் பேரழகுப் பாவையரும்

கண்மானை வெல்லும் விழியுடனே நோக்கித் தேன்வழியும் மலர்க்

கிண்ணவாயில் தேன்மாரி விழுந்திடவே மதுவெடுத்து அருந்தினர்....



மீனுடை உலவும் மங்கையரும் தோற்கும் வண்ணம்

ஊனுடை உடம்பெடுத்தும் ஒப்பிலாது ஏற்கும் உருவம் 

மானுடை விழிவெல்லும் மகளிர் தம் மலர்வாய்த்

தேனுடை வழியும் இடை பொழியும் மதுவருந்தினர்...



தேவலோக மங்கையரும் விந்தையான பேரழகின்

தேகம் கொண்டும் மகளிர்க்கு ஒப்பாமல் விழியழகில்

காவுலவும் மான்வெல்லும் பார்வையிலே பூவிதழில்

தேனுலவித்  ததும்பும் அமிழ்தெனும் கள்ளருந்தினார்...



வானுலக அரம்பையரும் வித்தார மங்கையரும்

ஊனுலவும் உருக்கொண்டு இம்மகளிர்க்கு ஒப்பிலா

மானுலவும் விழிவென்று அழகிய பூவிதழ் ஒழுகும்

தேனுலவும் தேனிடை வழியவே  மதுவருந்தினர்...



வான்தேரின் வனிதையரும் வித்தகப் புனிதையரும்

ஊன்தேரின் உருக்கொண்டு உலவும் இணையில்லாத் 

தான்போரில் வெல்லும் மான்விழியால் மங்கையரும்

தேன்மாரிப்  பொழியும் பூவிதழால் கள்ளருந்தினார்....





பாடல்:

மீனுடைய விசும்பினார் விஞ்சை நாட்டவர்

ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்

மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்

தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே...



விளக்கம்:

விண்மீன்கள் நிலவும் வானுலக மங்கையரும் வித்தியாதர உலகத்து

வித்தியாதர மகளிரும் ஊனுடம்பு உடையவராகி உருவம் கொண்டு

எழுந்து வந்தால் இம்மகளிர்க்கு அழகிலே ஒப்பாகார்.

விழியழகிலே மானை வென்ற மங்கையர் தேனையொத்த மலர்வாயில்

தேன்மாரி பொழிந்தார் போல தன் வாயால் மதுவருந்தினர்...

No comments:

Post a Comment