கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே
ஆறாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
கம்பனின் கற்பனை வளத்தை உங்கள் மத்தியிலே கொண்டு வருவது
கம்பனுக்கு நான் செய்யும் சிறு தொண்டு என நினைக்கிறேன்...
மருகத் தொடங்கும் பூ மணத்தினராய் ஊனுடல் உள்ளமும்
உருகத் தொடங்கும் இனத்தவரான பாவையரும் மஞ்சத்தில்
பெருகத் தொடங்கிய கலவியெனும் போரிலே வெற்றி பெறப்
பருகத் தொடங்கிய மதுவெனும் அமிழ்தம் தனில் மிதந்தனர்...
தேக்கிய மணங்கமழும் பூவையரும் இன்பத்தின் இலக்கைத்
தாக்கிய போரிலே கூடிய மஞ்சத்தில் வென்றிட அமிழ்தென
ஆக்கிய மதுவை அப்போரிலே வெல்லும் வேட்கையில்
தூக்கிய பொற்கிண்ணத்தில் இதழ்கள் நனைந்திட அருந்தினர்...
நெஞ்சத்தில் விளைந்த ஆசையுடன் பாவையரும் கூடும்
மஞ்சத்தில் வளைந்து தாமும் வென்றிட உள்ளமும் ஆடும்
ஊஞ்சலில் அங்குமிங்கும் ஆடியசைந்து அருந்திய மதுவின்
கொஞ்சலில் எங்குமின்பம் தேடியதில் பொருந்திக் களித்தனர்....
சுருங்கி விரியும் ஆசையுடன் மகளிரும் பூமஞ்சம் தனில்
நெருங்கிப் புரியும் கலவிப் போரிலே வென்றிடத் தாமும்
பொருந்திப் பிரியும் இன்பம் தேடிட அமிழ்தெனும் மது
அருந்திச் சரியும் இளமையுடன் இரவைக் களித்தனர்...
துடிக்கும் உணர்வின் இன்பத் தவிப்புடன் மகளிர்தம் இளமை
நடிக்கும் கலவி நாடகத்தில் களிப்புடன் வென்றிடவே இதழில்
வடிக்கும் மதுவும் கரைந்து இடையிடை இறங்கிஏறி முடிவில்
மடிக்குள் கலக்க மன்றாடிக் கொண்டாடியங்கு வென்றாடினர்...
பாடல்:
பூக்கமழ் ஓதியர் போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்
ஆக்கிய அமிழ்து என அம்பொன் வள்ளத்து
வக்கிய பசு நறா மாந்தல் மேயினர்.
விளக்கம்:
பூக்களின் மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்டிர் மலர்கள் பரப்பிய
மஞ்சத்திலே கலவி புரியும் போரிலே கூடிக் களிக்கும் ஆவலுடைய மனத்தினராய்
அப்போரிலே வெல்வதற்கென ஆக்கப்பட்ட அமிழ்தம் போல அழகிய பொன்வண்ணக்
கிண்ணத்தில் ஊற்றிய மதுவை பருகத் தொடங்கினர்.
No comments:
Post a Comment