கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே
ஒன்பதாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
இரவினிலே நிலவெரியும் ஒளி வெள்ளத்தின்
வரவினிலே மனமயங்கி மதுவுண் வள்ளத்தின்
பரப்பினிலே வலம்வந்து காமத் தணல் மூட்டி
நிரப்பியதன் நெருப்பினிலே கரைந்தது மதுவும்...
யாமம் தனிலே மகளிரும் கூந்தலில் மலர் அகில்மிகைத்
தூமம் இட்டு மோகந்தொட்டு அருந்துகின்ற வெண் மதுவும்
ஓமம் தனிலே விழுந்துருகும் நெய்யெனவே மெய்யுருக்கும்
காமக் கனலிலே தாகந்தொட்டு விழுந்துருகிக் கரைந்தது...
அகில் புகையூட்டி கூந்தலுக்கு மலர்சூடிய மகளிருள்
வகிக்கும் மோகத்தை நிறைக்க வெண்ணிற மதுவை
சுகிக்கும் மிகையூட்டி ஓமத்தில் வார்த்த நெய்யனவே
தகிக்கும் காமக்கனலைத் தூண்டிச் சுடர்விடச் செய்தது...
மேகக் கூந்தலில் மலர்சூடி அகில்தூமமிட்ட மகளிரும்
தேகந் தனிலே சூடேற்ற அருந்திய வெண்ணிற மதுவும்
தாகந் தணியாமல் எழுந்த காமக் கனலானது எரியும்
யாகக் குண்டந்தனிலே விழுந்துருகும் நெய்யாகியது...
புகைகூட்டிய அகில் மணமிட்டதோடு மகளிரும் தம்மெழில்
சிகைகூட்டியதில் மலர்பல அணிந்து வெண்மது அருந்தியதன்
வகைகூட்டிய உணர்வும் கொதிக்கும் ஓமத்தில் நெய்யென
மிகைகூட்டியதில் காமக் கனலை நெஞ்சந்தனில் மூட்டியது...
குழலினிலே அகில்புகைக்காட்டி வாரிப் பூச்சூடிய மகளிரும்
மழலைத் தான் மயங்கும் பாலையொத்த மதுவும் அருந்தியது
தழலினிலே வார்க்கும் ஓம நெய்யெனவே உருகிய இரவின்
சூழலும் காமத் தணலுக்கு மெய் வார்த்ததைப் போலிருந்தது...
பாடல்:
தாமமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை
ஓம வெங் குழி உகு நெய்யின் உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே...
விளக்கம்:
மலர்மாலையும் புனுகும் நிறைந்திருக்க அகில் புகையூட்டபட்ட
கூந்தலையுடைய மகளிர் உண்ட தூய்மையான மதுவானது
கனல் நிறைந்த யாகக் குண்டத்திலே பெய்த ஓம நெய்யைப்
போன்று அவர்தம் உள்ளத்தினுள்ளே உறைகின்ற கொடிய காமக்
கனலினை மேலும் சூடேற்ற செய்தது.
No comments:
Post a Comment