Saturday, March 23, 2013

வெள்ளணி விழாவென இருந்தது கள்ளருந்து​ம் கூடம்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

நான்காவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



தசரதனின் சேனைகள் யாவரும் மற்றும் கொண்டு வந்த யாவையும்

தேங்கியிருந்த கூடமானது வெண்ணிலவின் ஒளியை வாரி இறைத்துக்

கொண்டிருந்து மகரக் கொடியேந்திய மன்மதனுக்கு பிறந்த நாள்

கொண்டாடுவதைப் போல் கோலாகலமாய் அமைந்தது எனலாம்...





இகழ்தலும் யாரையும் யாவரும் திசைகள்தோறும் எண்ணிப்

புகழ்தலும் வெண்ணிலவின் ஒளியெங்கும் பரவும் வண்ணம்

நிகழ்தலும் கள்ளருந்தி மயக்கத்தில் திளைத்துப் பொழுதும்

நகர்வதும் பகர்வதுமாய் இருந்தது மன்மதப் பெருவிழா...



எள்ளி நகையாடும்  திசைகளிலும் யாவரும் யாவையும்

கொள்ளை ஒளியூட்டும் நிலவின் கோலமும் காலமும்

வாள் உறையும் மகரக் கொடியேந்தும் மன்மதனுக்கு

வெள்ளை அணிந்து விழாவெடுத்தது போலிருந்தது...



துள்ளி எழுந்து விளையாடத் துடிக்கும் திசைகளிலும்

வெள்ளி உருக்கி வார்த்ததன்  ஒளியும் பரவும்  வெட்டித்

தள்ளும் வாளும் கொடியும் படைகொண்டு  மாரனுக்கு

அள்ளிச் சூடும் வெள்ளணி விழாவை ஒத்திருந்தது...



கள்ளும் கசிந்துருகி காணுமிடம் எங்கும் ஓடிப்பெருகித்

துள்ளும் வண்ணம்  வெண்ணிலவின் ஒளியங்கே பருக

அள்ளும் கிண்ணம் போல் ஆசை தீர அள்ளிப்  பருகித்

தள்ளும் தள்ளாத  மயக்கத்தின்  மன்மத விழாவானது...





பாடல்:

எள்ள அருந் திசைகளோடு யாரும் யாவையும்

கொள்ளை வெண்  நிலவினால் கோலம் கோடலால்

வள் உறை வயிர வாள் மகரகேதனன்

வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே...



விளக்கம்:

இகழ்வதற்கு அரிய திசைகளுடனே, அத்திசைகளில் வாழும் உயிருள்ள

யாவரும் மற்றும்  உயிரற்ற பொருட்களும், அளவில்லா வெளிச்சத்தைக்

கொட்டி அளக்கும் வெண்ணிலவின் கோலம்  கொண்டதனால் கடலால்

சூழப்பட்ட இவ்வுலகமானது வலிமை பொருந்திய கூர்மை தங்கிய

வாளினையுடைய மகர (சுறா) மீனைக் கொடியாககக் கொண்ட மன்மதனுக்கு

வெள்ளுடையணிந்து விழா எடுத்தது போன்று  இருந்தது மது அருந்தும்

கேளிக்கைக் கூடமாகும்.

No comments:

Post a Comment