Saturday, March 23, 2013

மயங்கித் திளைக்க மகளிர் நோக்கியங்கே விரைந்தனர்​...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஐந்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...


மது அருந்துவதற்காக மகளிர் சென்று தங்கியிருந்த இடங்களின்

வருணணையே கீழ்வருமாறு காண்க...



கூட்டம் கூட்டமாய் மகளிரும் நறுமணம் பூத்துக் குலுங்கும்

தோட்டங்களிலும் பளிங்கு அறைகளிலும் மது அருந்தியங்கு 

ஆட்டம் பாட்டமாய்க் கொண்டாடிக் களித்திடவும் ததும்பும்

நாட்டத்துடன்  நாழிகை கடத்திடாமல் விரைந்து சென்றனர்...



முத்துப் பந்தலானது விண்ணில் ஒளிர்கின்ற விண்மீனை

ஒத்தும் நெருங்கித் தவழ்கின்ற மேகம் தங்கும் திரைகளும்

அத்துடன் குளங்களைப் போலிலங்கும் பளிங்கறைகளும்

பூத்து மணக்கும் மலர்ப்பந்தலிலும் மகளிர் சென்று தங்கினர்...



ஒளிர்கின்ற விண்மீனை ஒத்த முத்துப் பந்தலும் வந்து

ஒளிகின்ற மேகக் கூட்டங்கள் தங்கும் திரைச்சீலைகளும்

மிளிர்கின்ற குளங்கள் போல் விளங்கும் பளிங்கறைகளும்

துளிர்க்கின்ற மணம்பரவும் பூப்பந்தலை மகளிர் அடைந்தனர்...



முத்துப்  பந்தலின் கீழும் தாகம் எடுக்கும் மோகன வாய்ச்

சொத்துக்கு சொந்தம் தேடிய மகளிரெல்லாம் ஏகமனதாய்

பூத்துக் குலுங்கும் மலர்ச் சோலைகளிலும்  காமத்தின்

வித்துக்கு  மதுவார்த்திட மயங்கித் தியங்கிச் சென்றனர்...



தயங்கி மின்னும் தாரகைப் போன்ற முத்துப்  பந்தலும்

இயங்கி வரும் காரதனை தழுவும் திரைச்  சீலைகளும்

முயங்கி வழியும் குளம் போல்மின்னும் பளிங்கறைகளும்

மயங்கித் திளைக்க மகளிர் நோக்கியங்கே விரைந்தனர்...




 
பாடல்:

தயங்கு தாரகை புரை தரள நீழலும்

இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்

கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்

வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார்.
 


விளக்கம்:

ஒளிர்கின்ற விண்மீன்களை போன்று விளங்கும் முத்துப் பந்தலின் நிழலிலும்

வானில் தவழும் மேகங்கள் நெருங்கித் தங்குகின்ற திரைச் சீலையிட்ட இடங்களிலும்

குளங்கள் போல் ஒளிர்கின்ற பளிங்கறைகள் கொண்ட தோட்டங்களிலும்

பூத்து மணம் குலுங்கும் மலர்ப் பந்தல்களிலும் சென்று மதுவருந்துவதற்காக

மகிளிர் தங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment